Monday, November 28, 2005

நினைவின் வலிகள்


வரிகள் - அம்புலி (உதயலட்சுமி)

புல்நுனி ஈரத் தொடுகையில்
புலர்ந்தும் புலராத வைகறையில்
அலையெறிக்கும் கடல்வெளியில்
அனல் தெறிக்கும் பகற் பயணிப்பில்
துளிர்க்கின்றது உங்கள் நினைவு.
பழையன வாய்க் காணும்
பாதை நெடுகிலும்
உங்களுடன் திரிந்த
நினைவுகளின் கொப்பளிப்பு

தூரங்கள் தாண்டிப்
பயணம் ஒன்றுக்காய்
அருகுவந்த சொந்தமானீர்.
உறவுகளின் பிரிவு வலியை
உயிர் நீவி ஆற்றிய விரல்களானீர்.

பதுங்ககழி விழித்திருக்கும் இரவுகளில்
எறிகணை மழை பொழியும் கோடைகளில்
நுளம்புகளின் சங்கீதம் சகிக்கமுடியாத
பொழுதுகளில்
நிலவின் நிழல் வருடிய
நிம்மதிக் கணங்களில்
உம் இதயங்களின் கதை படித்தோம்.
உம் கனவுகளின் ஆழத்தைக்
கணக்கிட்டோம்.
இன்று எல்லாம் மௌனமாய்ப் போயிற்று.

மொழி வழி தெறிக்கமுடியாது
அமுங்கிக் கனல்கிறது
நினைவுப் பிழம்பு.

முன்னெரியும் சுடரிலிருந்து பெரிதாகி
வானைத் தொட விரிகிறது
உங்களின் விம்பம்
உயிர் உருகும் துயில் நிலப்
பாடலுக்குள் கரைந்து
காணாமல் போகிறோம் இங்கெல்லாரும்.

உள்ளிருந்து வருவீர்களா?
உயிர் பெற்று உலவுவீர்களா?
புன்னகைப் பூச் சொரிந்து மறைவீர்களா?
மூடியவிழிகளுள் தேடுகின்றோம் - பின்
தீயெரிக்கும் நினைவுகளுடன் திரும்புகின்றோம்.

பற்றி நிற்கும் எம் கரத்திற்
துப்பாக்கிகளல்ல – உம்
துடிப்புகளே உண்டு.
நீங்கள் பயணித்த
இடர்களை அடர்ந்த பாதைகளில்
உங்கள் கனவுகளைக்
கண்களுள் தேக்கிக் கொண்டு
நீங்கள் தொடமுயன்ற
தேசத்தின் விடியலை நோக்கி
இதோ நாம் புறப்பட்டு விட்டோம்.
என்றோ ஓரநாள்
விடியத்தான் வேண்டும்
எம்மிரவுகள்.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய


தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

கண்கள் போனதய்யா ராசா


கண்கள் போனதய்யா ராசா
யார் கண்கள் பட்டதய்யா ராசா


விதி வந்து சேர்ந்ததோ
மலர் கொய்து சென்றதோ
சாகும் வயதிலே நானிருக்க இளம்
குருத்து உன்னை தீயில் போடுவதோ
கொள்ளி எனக்கு நீ போடாமல்
இறுதி கடன் மறந்து உதிர்ந்தாயோ

என் கண்கள் போனதய்யா ராசா
யார்கண்கள் பட்டதய்யா ராசா

படலையில் தினம் காத்திருப்பேன்
பள்ளி சென்று நீ திரும்பும் வரை
சுடலைக்கு உன்னை அனுப்புவேனோ
சோதனை ஏனனை ராசாவே

பகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே
சுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே
உன்னைப்போலொரு வீரன் நான் பெறவே
என்ன தவம் செய்தேன் ராசாவே
என்ன தவம் செய்தேன் ராசாவே

என் இனமே...! என் சனமே...!


என் இனமே...! என் சனமே...!
என்னை உனக்குத் தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

என் இனமே...! என் சனமே...!

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா

என் இனமே...! என் சனமே...!

அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவும் உண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...!

பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...!

என் முடிவில் விடிவிருக்கும்
எதிரிகளின் அழிவிருக்கும்
சந்ததிகள் சிரித்து நிற்க
சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...!

கடலே எழுந்தே வீழ்ந்ததே...!


கடலே எழுந்தே வீழ்ந்ததே
மலிந்தே உடல்கள் மிதந்ததே

எங்கள் துயர் அறிந்திருந்தாய்
இருந்தும் ஏன் தேம்ப வைத்தாய்
உந்தன் மடி வாழும் தீவை
உதறி ஏன் உடைய வைத்தாய்
தாயாக நீயிருந்தாய்
தண்ணீரில் மூழ்கடித்தாய்
தீராத சாபம்தானோ
வேதனை முடிவது முறையல்லவோ

ஆயிரம் குண்டுகள்தாண்டி
அலையின் பிடியில் மடிவதா
ஆயிரம் கால தேசம்
அரை நொடியில் அழிவதா
உனைக் காக்க உயிரைத் தந்தோம்
உன் கையால் சாவதா
இருந்தாலும் வீழ்ந்தே எழுவோம்
தமிழ் வீழ்ந்து போவதா
தேசத்தின் கரங்கள் சேர்த்தே
நெஞ்சத்தில் நின்றாடும் சோகங்கள் தீர்ப்போம்

ஈழம் எங்கள் தாயகம்


ஈழம் எங்கள் தாயகம்
என்றும் வாழும் ஆலயம்
வாழும் காலம் யாவும் எங்கள்
உயிரைத் தந்தும் காத்திடுவோம்

வீரர்கள் என்றும் சாவதில்லை
சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை
தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை
வெற்றியின் படியில் ஏறுகின்றோம்
எங்களின் தியாக வித்துக்கள்
நிட்சயம் ஒரு நாள் பயிராகும்
எங்களின் கனவுகள் நனவாகும்
ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும்

தடைகள் கோடி என்றாலும்
படைகள் தேடி வந்தாலும்
விடைகள் எங்கள் தோள்களிலுண்டு
விடியும் ஒரு நாள் வாருங்கள்
நாளை மலரும் ஈழத்திலே
சுதந்திர மலர்கள் மொட்டவிழும்
இன்றைய எங்கள் போராட்டம்
முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும்.

நன்றி - நிதர்சனம் வெளியீடு - 9 (கூவு குயிலே)

ஒரு கிளி தூங்குதம்மா


கார்த்திகை 27 தொகுப்பிலிருந்து

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாள்

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி

ஒவ்வொரு இரவும் இங்கே விடியும்
அவன் வீரம் சொல்லி நாள்தோறுமே
ஒவ்வொரு பூவும் இங்கே மலரும்
அவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே
இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்
அவன் பாதையில் பெண்ணே..!
சுடர் தீபம் ஏற்றிடு

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்
அவன் பாதையில் பெண்ணே..!
சுடர் தீபம் ஏற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

பயந்தவர் பார்வையிலே பெண்ணே
சின்னப் பனித்துளியும் கடலளவு
துணிந்தவர் மனதில் பெண்ணே
பெரும் அலைகடலும் துளியளவு
அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை
புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை
புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

ஆக்காண்டி ஆக்காண்டி...


சண்முகம் சிவலிங்கம்

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்,
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார் -
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்.
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்

ஆனவரைக்கும்,
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்,
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

மாங்கிளியும் மரங்கொத்தியும்..

மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத் தடையில்லை
நாங்கள் மட்டும் உலகத்திலே
நாடு திரும்ப முடியவில்லை
நாடு திரும்ப முடியவில்லை

சிங்களவன் படைவானில்
நெருப்பை அள்ளிச் சொரிகிறது
எங்கள் உயிர்த் தமிழீழம்
சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கின்றான்

பெற்றவங்க ஊரிலே
ஏங்குறாங்க பாசத்திலே
எத்தனை நாள் காத்திருப்போம்
அடுத்தவன் தேசத்திலே

உண்ணவும் முடியவில்லை
உறங்கவும் முடியவில்லை
எண்ணவும் முடியுதில்லை
இன்னும்தான் விடியுதில்லை

கிட்டிப்புள்ளு அடித்து நாங்கள்
விளையாடும் தெருவிலே
கட்டி வைத்து அடிக்கிறானாம்
யார் மனதும் உருகவில்லை

ஊர் கடிதம் படிக்கையிலே
விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப்புலிகள் பக்கத்திலேயே
போகமனம் துடிக்குது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது


பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

நாய் வளர்த்துப் பாலை வார்த்தால்
வாளையாட்டிக் கொள்ளும்
நம்பிப் பெற்ற பிள்ளைகளோ
நன்றியினைக் கொல்லும்

நாய் வளர்த்துப் பாலை வார்த்தால்
வாளையாட்டிக் கொள்ளும்
நம்பிப் பெற்ற பிள்ளைகளோ
நன்றியினைக் கொல்லும்

கோவிலுண்டு பூசை செய்ய
யாருமிங்கு இல்லை
கொள்ளியிடக் கூட ஒரு
பிள்ளையிங்கு இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள்
தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார்
கட்டிலுக்கு வந்தவளும் என்னைவிட்டுப் போனாள்
தொட்டில் வந்த பிள்ளைகளோ தூரதேசம் போனார்

விட்டபடி சுத்துதடா
பூமியென்ற பந்து
இரத்தபாசம் என்பதெல்லாம்
இங்கு வெறும் பேச்சு

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்

இறுவெட்டு - கரும்புலிகள்
இசை - கண்ணன்
வரிகள் -
பாடியவர்கள் -
வெளியீடு - தமிழீழ விடுதலைப் புலிகள் (சுவிஸ்கிளை)




ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய
அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!


நன்றி - தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை)

Saturday, August 20, 2005

தேரடியில் காலையிலே.........

பாடலாசிரியர் புதுவை இரத்தினதுரை
இசை நாடா நல்லை முருகன் பாடல்கள்


தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா

கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா

Sunday, January 16, 2005

தீயினில் எரியாத தீபங்களே

தீயினில் எரியாத தீபங்களே - நம்
தேசத்தில் உருவான ராகங்களே
தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்
தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே
தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே
தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே
புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்
இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்
விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்
ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!