Monday, July 31, 2006

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா

பாடியவர் - இராசேந்திரம்
பாடல் வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு


என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா
எதிரி காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா
அன்னை மண்ணைக் காத்திட உன்மனம் தயக்கமா
அஞ்சி நீயும் வாழ்வதால் தமழினம் மதிக்குமா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா
தாயகத்தைக் காத்திடத் தயக்கமென்ன சொல்லடா
பேய்கள் உந்தன் ஊரெரித்து நாசம் செய்ய விடுவதா
பேடி போல ஓடி ஓடி உரிமை கெட்டுச் சாவதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

உயிரினும் அரியதெங்கள் மானம் என்று எண்ணடா
உறுதியுள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா
இமயம் தன்னில் கொடியை நாட்ட மறவர் பிள்ளை அல்லவா
இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளைப் பாரடா
விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா
அடிமை வாழ்வில் முடி வணங்கி தமிழினமே சாவதா
அறிவு அற்ற மனிதனாக அவல வாழ்வு வாழ்வதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா

பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்
புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்
நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்
தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்
மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல
மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள
மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா
மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக
தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது
தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.