Monday, November 28, 2005

நினைவின் வலிகள்


வரிகள் - அம்புலி (உதயலட்சுமி)

புல்நுனி ஈரத் தொடுகையில்
புலர்ந்தும் புலராத வைகறையில்
அலையெறிக்கும் கடல்வெளியில்
அனல் தெறிக்கும் பகற் பயணிப்பில்
துளிர்க்கின்றது உங்கள் நினைவு.
பழையன வாய்க் காணும்
பாதை நெடுகிலும்
உங்களுடன் திரிந்த
நினைவுகளின் கொப்பளிப்பு

தூரங்கள் தாண்டிப்
பயணம் ஒன்றுக்காய்
அருகுவந்த சொந்தமானீர்.
உறவுகளின் பிரிவு வலியை
உயிர் நீவி ஆற்றிய விரல்களானீர்.

பதுங்ககழி விழித்திருக்கும் இரவுகளில்
எறிகணை மழை பொழியும் கோடைகளில்
நுளம்புகளின் சங்கீதம் சகிக்கமுடியாத
பொழுதுகளில்
நிலவின் நிழல் வருடிய
நிம்மதிக் கணங்களில்
உம் இதயங்களின் கதை படித்தோம்.
உம் கனவுகளின் ஆழத்தைக்
கணக்கிட்டோம்.
இன்று எல்லாம் மௌனமாய்ப் போயிற்று.

மொழி வழி தெறிக்கமுடியாது
அமுங்கிக் கனல்கிறது
நினைவுப் பிழம்பு.

முன்னெரியும் சுடரிலிருந்து பெரிதாகி
வானைத் தொட விரிகிறது
உங்களின் விம்பம்
உயிர் உருகும் துயில் நிலப்
பாடலுக்குள் கரைந்து
காணாமல் போகிறோம் இங்கெல்லாரும்.

உள்ளிருந்து வருவீர்களா?
உயிர் பெற்று உலவுவீர்களா?
புன்னகைப் பூச் சொரிந்து மறைவீர்களா?
மூடியவிழிகளுள் தேடுகின்றோம் - பின்
தீயெரிக்கும் நினைவுகளுடன் திரும்புகின்றோம்.

பற்றி நிற்கும் எம் கரத்திற்
துப்பாக்கிகளல்ல – உம்
துடிப்புகளே உண்டு.
நீங்கள் பயணித்த
இடர்களை அடர்ந்த பாதைகளில்
உங்கள் கனவுகளைக்
கண்களுள் தேக்கிக் கொண்டு
நீங்கள் தொடமுயன்ற
தேசத்தின் விடியலை நோக்கி
இதோ நாம் புறப்பட்டு விட்டோம்.
என்றோ ஓரநாள்
விடியத்தான் வேண்டும்
எம்மிரவுகள்.

No comments: